விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியிருக்கிறது. எதிரே வந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியுடன் நேருக்கு நேர் மோதியதில், புதிய தலைமுறை மாருதி கார் மிக மோசமாக சிதைந்து போயுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டாடா சஃபாரி காருடன் புதிய மாருதி டிசையர் கார் மோதி இருக்கிறது.
மேலும், அதிவேகத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி மறுபுறத்தில் சென்று இருக்கிறது. அப்போது சாலையின் மறுபுறத்தில் வந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியுடன் நேருக்கு நேர் மோதி இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த சம்பவத்தில் டிசையர் காரின் ஓட்டுனர் பகுதி உள்பட பக்கவாட்டு பகுதி மிக மோசமான உருக்குலைந்து போயுள்ளது. இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்குப்பட்டு புதிய டிசையர் காரின் கட்டுமானம் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்று கருதப்பட்டது.
ஆனால், இந்த படங்களை பார்க்கும்போது டிசையர் காரின் கட்டுமானம் இன்னமும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மறுபுறத்தில் டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் முன்பகுதி மட்டும் சேதமடைந்துள்ளது. பயணிகள் பகுதி அதிகம் சேதமடையவில்லை.
வரும் 16ந் தேதி புதிய மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நேரத்தில், டீலருக்கு அனுப்பப்பட்ட புதிய டிசையர் கார் விபத்தில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. டீலர் பணியாளர் இந்த காரை ஓட்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக டீலர் பணியாளர்கள் இதுபோன்ற புதிய கார்களை அதிவேகத்தில் ஓட்டி, மிக மோசமான விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி இருக்கிறது. இந்த விபத்தில் காரை ஓட்டியவர்கள், காரில் பயணித்தவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரிய வில்லை.