கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும் ஜப்பானின் ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் 1995 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஹோண்டா சிட்டி கார், இந்திய கார் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு மாடலாக வெற்றி பெற்றுவிட்டது.
கடந்த ஜனவரி மாதத்தில் தனது கார்களின் விலையை 3% உயர்த்திய ஹோண்டா நிறுவனம் தற்போது இந்த ஆண்டிலேயே இரண்டாவது முறையாக மீண்டும் அனைத்து கார் மாடல்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றம் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் ஹோண்டா நிறுவனம் புதிதாக டபிள்யூஆர்-வி எனும் கிராஸ்ஓவர் மாடல் கார் ஒன்றினை அறிமுகப்படுத்தியது. புதிய விலை ஏற்றத்தில் இருந்து இந்த கார் மட்டும் விலக்கு பெற்றுள்ளது.விலை ஏற்றம் குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் கூறுகையில், "போக்குவரத்து மற்றும் மூலப் பொருள் விலை ஏற்றத்தின் காரணமாக கார்களின் விலையை உயர்த்தும் முடிவை எடுக்க நேர்ந்தது, இந்த விலை ஏற்றம் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அமலாகும்" என்றார்.
இந்த புதிய விலை ஏற்றத்தின்படி ஹோண்டா நிறுவனத்தின் டபிள்யூஆர்-வி மாடலை தவிர்த்து ஹோண்டா சிட்டி, பிரியோ, அமேஸ், ஜாஸ், பிஆர்-வி, சிஆர்-வி மற்றும் ஹைபிரிட் காரான அகார்டு கார்களின் விலை வரும் ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபாய் அதிகரிக்க உள்ளது. (ஹோண்டா கார்கள் 4.69 லட்ச ரூபாய் முதல் 37 லட்ச ரூபாய் வரையிலான விலை கொண்டது.)இதே போல கடந்த ஜனவரி மாதம் உற்பத்தி செலவினம் அதிகரிப்பு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் நீடித்து வந்த ஏற்ற இறக்கங்கள் காரணமாக கார்களின் விலையை ஹோண்டா நிறுவனம் 3% உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா நிறுவனம் மட்டுமல்லாது ஹூண்டாய், மஹிந்திரா, நிஸான், ரெனோ, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன், மெட்சிடஸ் பென்ஸ் நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையை ஜனவரி மாதவாக்கில் உயர்த்தியது நினைவிருக்கலாம்.இதே போல சமீபத்தில் ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார்களை தயாரிக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனமும் அதன் கார்களின் விலையை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதலாக 2% உயர்த்துவதாக அறிவித்தது.
No comments:
Post a Comment