டாடா கார்கள் என்றால் முகம் சுளித்த காலம்போய் இப்போது ஆவலைத் தூண்டும் அளவுக்கு மேம்பட்டு நிற்கின்றன. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ காருக்கு கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பு சாட்சியாக இருக்கிறது. இந்த நிலையில், கடும் சந்தைப் போட்டி மிகுந்த 4 மீட்டர் நீளத்துக்கும் குறைவான காம்பேக்ட் செடான் கார் என்ற ரகத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த செக்மென்ட்டில் டீகோர் என்ற புதிய கார் மாடலை விரைவில் களமிறக்குகிறது.
ஏராளமான கார் மாடல்கள் போட்டி போடும் இந்த செக்மென்ட்டில் சற்று வித்தியாசத்தை காட்டினால்தான் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து கொண்டு சற்று புதிய வடிவமைப்பு தாத்பரியங்களுடன் புதிய டீகோர் கார் மாடல் வருகிறது.
டிசைன்
கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் டாடா டியாகோ காரில் பூட்ரூம் சேர்க்கப்பட்ட செடான் ரக மாடல்தான் டீகோர். எனவே, முன்புற வடிவமைப்பு டியாகோ காரை ஒத்திருக்கிறது. தேன்கூடு வடிவ க்ரில் அமைப்பின் நடுவில் டாடா லோகோ கம்பீரமாக வீற்றிருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், க்ரோம் வளையத்திற்குள் பனி விளக்குகள் இருப்பதும் கவர்ச்சிதான். டியாகோ கார் போன்றே முகப்பு கவர்கிறது.
பக்கவாட்டு டிசைன்
மார்க்கெட்டில் உள்ள அனைத்து காம்பேக்ட் செடான் கார்களுமே ஹேட்ச்பேக் மாடலின் அடிப்படையிலான செடான் வெர்ஷன்தான். விற்பனையில் முன்னணியில் உள்ள காம்பேக்ட் செடான் கார்களின் பக்கவாட்டு தோற்றமும், பின்புற தோற்றமும் கவரும் வகையில் இருக்காது. பூட்ரூம் கத்தரித்தது போன்றே காட்சி தரும். ஆனால், புதிய டாடா டீகோர் கார் மாடலில் பூட்ரூம் மிகச்சிறப்பாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், இதன் ரூஃப்லைன் எனப்படும் கூரை அமைப்பு மிகவும் வித்தியாசமாக கூபே கார் போன்று வடிவமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு.
கவர்ச்சியான அலாய் வீல்கள்
இந்த காரின் பெட்ரோல் மாடலில் 15 இன்ச் அலாய் வீல்கள்[டீசல் மாடலில் 14 இன்ச் அலாய் வீல்கள் மட்டுமே]] பொருத்தப்பட்டு இருப்பதும் காருக்கு பொருத்தமாக இருக்கிறது. இதனால்தான், இந்த காரை 'ஸ்டைல்பேக்' என்று குறிப்பிடுகிறது டாடா மோட்டார்ஸ்.
பின்புற டிசைன்
பெரும்பாலான காம்பேக்ட் செடான் கார்களின் பின்புற டிசைன் கவரும் வகையில் இல்லை என்பது நிதர்சனம். ஆனால், புதிய டாடா டீகோர் காரின் பின்புற டிசைன் மிகச்சிறப்பாகவே இருக்கிறது. எல்இடி டெயில் லைட், வலிமையான பம்பர், பூட்ரூமிலிருந்து சீராக மேலே எழும் கூரை அமைப்பு என கவர்ச்சியாகவே இருக்கிறது. பின்புறத்தில் ரூஃப் ஸ்பாய்லரும் காரின் கவர்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சம்.
பூட்ரூம்
புதிய டாடா டீகோர் காரின் அடுத்து ஒரு முக்கிய விஷயம் பொருட்கள் வைத்துக் கொள்வதற்கான பூட் ரூம் இடவசதி. ஆம். இந்த செக்மென்ட் கார்களிலேயே இப்போது அதிக இடவசதி கொண்ட கார் மாடல் புதிய டாடா டீகோர் கார்தான். இந்த காரில் 419 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இருக்கிறது. இந்த காரின் சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய டேம்பர் மற்றும் இதர உதிரிபாகங்கள் மூலமாக அதிக பூட்ரூம் இடவசதி சாத்தியப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பூட்ரூமில் பொருட்களை வைத்து எடுப்பதும் சுலபமாகவே இருக்கிறது.
இன்டீரியர்
டாடா டியாகோ காரின் இன்டீரியர் அமைப்புதான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்டீரியர் மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டிருப்பதோடு, பழைய டாடா கார்களுடன் ஒப்பிடும்போது, உட்புறத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பாகங்களின் தரம் மேம்பட்டு இருக்கிறது. தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஆவணங்களை வைப்பதற்கு 24 ஸ்டோரேஜ் பகுதிகள் உள்ளன. இந்த காரின் இருக்கைகள், அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை மதிப்பை கூட்டும் விஷயங்களாக கூற முடியும். இரட்டை வண்ண டேஷ்போர்டின் இருமருங்கிலும் கொடுக்கப்பட்டு இருக்கும் ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் பிரத்யேக வண்ணம் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
புதிய டாடா டீகோர் காரில் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சிறந்த ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 5 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது, வீடியோ ப்ளேபேக், வாய்மொழி உத்தரவுகளுக்கு ஏற்ப செயல்படும் வசதிகளை கொண்டுள்ளது.
மொபைல்போனில் வரும் குறுஞ்செய்திகளை படித்து, வாய்மொழியாக சொல்லும் வசதியும் உண்டு. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் உள்ள திரை மூலமாக ரிவர்ஸ் கேமராவை இணைக்க முடிகிறது. டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி, நவி மற்றும் ஜூக் மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக பாடல்களை கேட்கும் வாய்ப்பும் இருக்கிறது.இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் உள்ள எழுத்துக்கள் எண்களை எளிதாக பார்க்க முடிகிறது. உயர்வகை மாடலில் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி இருப்பதும் இந்த காரின் மதிப்பை உயர்த்தும் விஷயம்.
டாடா கார்கள் என்றாலே இடவசதி சிறப்பாக இருக்கும். டியாகோ காரில் அதனை முழுமையாக பெற முடியாவிட்டாலும், அதனை விட வீல்பேஸ் நீளம் 50 மிமீ கூடுதல் என்பதால், டாடா டீகோர் காரின் இடவசதி சிறப்பாகவே இருக்கிறது. நீண்ட தூரம் அமர்ந்து பயணித்தாலும், இருக்கைகள் சொகுசான அனுபவத்தை தரும்.இதன் கூரை அமைப்பு கூபே போன்று இருந்ததால், பின்புற இருக்கையில் உயரமானவர்கள் அமர்ந்தால் தலை இடிக்கும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், நிச்சயமாக வளத்தியானவர்கள் கூட அமர்ந்து செல்வதற்கு எந்த சிரமமும் தெரிய வில்லை. பின் இருக்கை ஹெட்ரெஸ்ட்டை அட்ஜெஸ்ட் செய்ய முடியாது.
பெட்ரோல் மாடல்
டாடா டியாகோ காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே பெட்ரோல், டீசல் எஞ்சின்கள்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு மாடல்களிலுமே எஞ்சின் இயக்கத்தை ஈக்கோ மற்றும் சிட்டி என்று இருவிதமான நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. இந்த காரில் இருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த பெட்ரோல் எஞ்சின் நகர்ப்புற சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் ஓட்டுவதற்கு மிகச்சிறப்பாக இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி உற்சாகமூட்டுகிறது.
டீசல் மாடல்
இந்த காரில் இருக்கும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது இந்த மாடலிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான் இடம்பெற்று இருக்கிறது. டீசல் எஞ்சின் அதிர்வுகள் குறைவாக இருந்தாலும், 1,800 ஆர்பிஎம் முதல் 3,000 ஆர்பிஎம் வரையில் செயல்திறன் மிதமாகவே இருக்கிறது. இது நம் உற்சாகத்தை குறைக்கிறது. மேலும், நெடுஞ்சாலைகளில் ஓவர்டேக் செய்யும்போது கியரை குறைத்தே ஆக வேண்டும்.
டாடா டியாகோ காரின் மைலேஜ் விபரங்களின் அடிப்படையில் பார்க்கப்போனால் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜையும் தரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சிறந்த மைலேஜ் தரும் மாடல்களில் ஒன்றாக இருக்கும்.முன் இருக்கையில் அமர்ந்து சாலையை பார்க்கும்போது சிறப்பான பார்வை திறனை வழங்குகிறது. இதன் அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங் வீல் அமைப்பும் சாலையை எளிதாக பார்த்து ஓட்டுவதற்கும், பிடிமானத்திற்கும் நன்றாகவே இருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஓட்டுதல் தரம்
ஓட்டுதல் தரமும் சிறப்பாகவே இருந்ததாக எமது குழுவினர் தெரிவித்தனர். மோசமான சாலைகளை கூட இந்த கார் மிகச் சிறப்பாக கையாள்வதாகவும், பாடி ரோல் மிக குறைவாக இருப்பதை உணர முடிந்ததாகவும் தெரிவித்தனர். இதன் சஸ்பென்ஷனும் அனைத்து சாலை நிலைகளையும் செம்மையாகவே எதிர்கொள்கிறது.
பாதுகாப்பு வசதிகள்
புதிய டாடா டீகோர் காரில் முன்புறத்தில் இரண்டு உயிர்காக்கும் காற்றுப்பைகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. வளைவுகளில் கார் மிகுந்த நிலைத்தன்மையுடன் செல்வதற்கான கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், விபத்துக்களின்போது மோதல் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு பயணிகளுக்கு பாதிப்பை குறைப்பதற்கான விசேஷ கட்டமைப்பு போன்றவை இந்த காரை மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட மாடலாக மாற்றுகிறது.
எமர்ஜென்சி அசிஸ்ட்
ஃபோர்டு கார்களில் இருப்பதுபோன்றே, இந்த காரில் மிக முக்கிய வசதி ஒன்று உள்ளது. விபத்துக்கள் நேரும்போது, நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கார் இருக்கும் இடம் பற்றி துல்லியமாக தகவல் தரும் டாடா எமர்ஜென்சி அசிஸ்ட் ஆப் என்ற விசேஷ வசதியும் உள்ளது.
மதிப்பு வாய்ந்த கார்
புதிய டாடா டீகோர் கார் அனைத்து விதத்திலும் கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான தேர்வாக இருக்கும். விலை மட்டும் எதிர்பார்ப்பை பொய்க்காமல் நிர்ணயித்துவிட்டால், நிச்சயம் வாடிக்கையாளர்களின் தேர்வில் முக்கிய இடத்தை பெறும்.இந்த காரை மாருதி டிசையர் கார் அளவுக்கு விற்பனையில் போட்டியாக இல்லாவிட்டாலும், டாடா டியாகோ கார் போன்றே, தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை இந்த கார் ஏற்படுத்திக் கொள்ளும் என்று உறுதியாக நம்பலாம். டாடா மோட்டார்ஸ் விற்பனையில் டாடா டியாகோ காரை போன்று இந்த புதிய டாடா டீகோர் காரும் சிறப்பான பங்களிப்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment