இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், ஜப்பானின் 'ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா' நிறுவனத்துடன் இணைந்து 'இம்பல்ஸ்' என்ற பைக்கை 2011ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இது அட்வெஞ்சர் பைக்காகவும் பயன்படுத்தத்தக்க வகையில் உள்ள இந்தியாவின் ஒரே டூயல் பர்பஸ் மோட்டார்சைக்கிளாகும்.
வரும் ஏப்ரல் மாதம் முதல் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு சான்று இஞ்சின்களுடன் புதிய பைக்குகள் தயாரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில் திடீரென இம்பல்ஸ் பைக் மாடலை இந்திய சந்தையிலிருந்து நீக்கியுள்ளது ஹீரோ நிறுவனம்.இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத சூழ்நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து இம்பல்ஸ் பைக் மாடல் நீக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக 2010 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இம்பல்ஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. 150 சிசி இஞ்சின் கொண்ட இம்பல்ஸ் பைக்கிற்கு சமீபகாலமாக வரவேற்பு குறைந்து காணப்படுவதால் ஹீரோ நிறுவனம் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது.இருநிறுவனங்கள் கூட்டு சேர்ந்து தயாரித்த இம்பல்ஸ் மாடலில், நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின்படி ஹீரோ நிறுவனம் தன்னிச்சையாக எந்த ஒரு மேம்படுத்துதல் பணியையும் மேற்கொள்ளமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
நீக்கப்படும் இம்பல்ஸ் பைக்கில், 149.2 cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 13.2 பிஹச்பி ஆற்றலுடன் 13.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷனை பெற்றதாக உள்ளது. ஹீரோ இம்பல்ஸ் பைக் பிரேசிலில் விற்பனையில் இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்ஆர் ப்ரோஸ் பைக்கின் டிசைனில் உருவாக்கப்பட்டதாகும். முன்னதாக, இந்த பைக்கில் உள்ள150சிசி இஞ்சின் அட்வெஞ்சர் ரைடுகளுக்கு திருப்திகரமானதாக இல்லை என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் சிலர் இந்த பைக்கின் 150சிசி இஞ்சினை மாற்றிவிட்டு கரிஸ்மா பைக்கின் 223சிசி இஞ்சினை பொருத்தி கஸ்டமைஸ் செய்து ஓட்டிவந்தனர். இந்த பைக்கின் இஞ்சின் ஆற்றலை அதிகரிக்க ஹீரோ நிறுவனம் மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.245மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் ஆஃப்ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும் இம்பல்ஸ் மாடலில் புதிதாக கூடுதல் சிசி கொண்ட வேரியன்டை பெற்ற மாடலாக வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தமாதிரியான எந்தவொரு திட்டத்தையும் ஹீரோ செயல்படுத்தும் திட்டமில்லை என்றே தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment